பிரபல கன்னட சின்னத்திரை நடிகர் சுஷீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமா உலகில், நாம் விரும்பி ரசித்த பலரது மறைவையும் எதிர்கொள்ள வேண்டிய பெருந்துயரை இந்த வருடத்தின் பாதிக்குள்ளாகவே நாம் கடந்து வந்து விட்டோம். இந்தப் பட்டியலில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சிலரும் இருக்கின்றனர் என்பது விளக்க முடியாத வேதனையை ரசிகர்களுக்குத் தந்துள்ளது.
இந்த நிலையில் பிரபல கன்னட சின்னத்திரை நடிகர் சுஷீல் கவுடா கடந்த ஜூலை 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கன்னட சின்னத்திரை உலகினர் எனப் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுஷீலுக்கு வயது 30. உடற்பயிற்சி வல்லுநராகவும் அவர் பணியாற்றி வந்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் முயற்சியில் இருந்த சுஷீல் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் நடித்துள்ள ‘சலகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்கொலையின் பின்னணி இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள துனியா விஜய், ‘சுஷீல் கதாநாயகனாக நடிக்கும் திறமை கொண்டவர். படம் வெளியாவதற்கு முன்பே மறைந்து விட்டாரே’ என்று சோகமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும்,’கொரோனாவைப் பார்த்து மக்கள் பயப்படவில்லை. வருமானம் இழந்து வருகிறார்கள். வலிமையுடன் இந்த நெருக்கடியை நாம் தாண்டி வர வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
ஓர் இழப்பின் வலியில் இருந்து மீள்வதற்குள்ளாக அடுத்த மரணச் செய்தியா என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,