பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரை உலகில் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
‘இன்னும் பயணிக்க நீண்ட தூரம் இருக்கும் நிலையில், ஏன் இந்த இளம் வயதிலேயே தன் உயிரை அவர் மாய்த்துக் கொண்டார்?’ என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். அவரது மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பு கடைசியாக சுஷாந்த், தனது நண்பர் ஒருவரிடம் ஃபோனில் பேசியதாகத் தெரியவந்துள்ளது. அந்த நண்பர் ஒரு திரையுலக பிரபலம் என்றும், அவர் யார் என்பதை போலீசார் இதுவரை வெளிப்படுத்தவில்லை எனவும் *டைம்ஸ் நவ்* தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. மேலும் சுஷாந்தின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள மெடிக்கல் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
*இந்தியா டுடே* வெளியிட்டுள்ள செய்தியில் சுஷாந்த் இறப்பதற்கு முந்தைய தினம் அவரது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இரவு தாமதமாக உறங்கச் சென்றதால் காலையில் எழுவதற்கு நேரம் ஆன போதும் வீட்டில் உள்ள வேலையாட்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்தத் தகவல்களை சுஷாந்தின் நெருங்கிய நண்பர்கள் யாரும் உறுதிபடுத்தவில்லை.
சுஷாந்த் ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சுஷாந்தின் உடல் பந்ராவில் உள்ள அவரது வசிப்பிடத்தில் இருந்து டாக்டர்.ஆர்.என்.கூப்பர் முனிசிபல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவரது மரணசெய்தி தங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சுஷாந்தின் பிரிவால் வருந்தித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,