மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கடைசியாக இயக்கிய ‘லாபம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் நிச்சயமாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லாபம் படத்தை 7சி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், விஜய் சேதுபதி புரொடக்ஷனும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல், சாய் தன்ஷிகா என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கியிருக்கிறார்.
உணவு அரசியலும், கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இந்தப் படத்தில் தீவிரமான இடதுசாரி கொள்கைகள் முன்வைக்கப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
ஜனநாதன் திடீரென காலமானதால் அவர் இயக்கியிருக்கும் லாபம் திரைப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு திரையுலகிலும், பார்வையாளர் வட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்ததால் படம் பற்றிய விசாரணைகள் தமிழ்த் திரையுலகத்தில் தொடர்ந்து நடந்தன.
திட்டமிட்ட அடிப்படையில் லாபம் திரைக்கு வருமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வந்தன.
இது குறித்து தற்போது அந்தப் படத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை.
‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த தருணத்தில் ஜனநாதன் மறைந்தது எங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ‘லாபம்’ படத்தின் அனைத்து வேலைகளையும் முழுமையாக அவர் முடித்துக்கொடுத்து விட்டார். மிச்சமிருக்கும் சில பணிகளை எங்கள் படக் குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம்.
அனைத்து பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்கங்களில் பிரமாண்டமாகப் படம் வெளியாகவுள்ளது” என அறிவித்துள்ளது.
**-இராமானுஜம்**
�,