உலகம் முழுவதும் உள்ள சினிமாகாரர்களால் உயர்ந்த விருதாக, அங்கீகாரமாக மதிக்கப்படுவது. வருடந்தோறும் வழங்கப்பட்டுவரும் ஆஸ்கர் விருதுகள் ஆகும்.
94-வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா 2022 மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.
ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் போட்டியிட இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ,நாயாட்டு மற்றும் தமிழ் படங்களான கூழாங்கல், மண்டேலா உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்த்தனர் இறுதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கூழாங்கல் திரைப்படம் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு இந்திய நாட்டின் சார்பில் அதிகாரபூர்வ படமாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” பெற்றது.
யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல். இந்த படம் இதுவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை
1.மதர் இந்தியா, 2.சலாம் பம்பாய் 3. லகான் ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை பெறவில்லை.
**-அம்பலவாணன்**
�,