டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: கோலி

entertainment

டி20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக நீடித்து வரும் அவர், தற்போது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் துபாயில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பை கோலி வெளியிட்டுள்ளார். இருப்பினும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலியே கேப்டனாகத் தொடருவார். இது தொடர்பாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், “அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, தேர்வுக் குழு தலைவர் கங்குலி ஆகியோரிடமும் பேசினேன்.

நான் இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அணிக்கும் சிறந்த முறையில் சேவை செய்வேன். பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம். கடந்த 8-9 ஆண்டுகளாக 20 ஓவர், ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறேன். எனது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு விலகுகிறேன்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாகத் தயாராக இருக்க எனக்கு இடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் 20 ஓவர் கேப்டனாக இருந்த காலத்தில் அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டேன். 20 ஓவர் அணிக்காகத் தொடர்ந்து பேட்ஸ்மேனாகச் சிறப்பாக விளையாடுவேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அணியின் வீரர்கள், பயிற்சியாளர், பிற பணியாளர்கள், இந்தியா வெற்றி பெற நினைத்த அனைத்து இந்தியர்களுக்கும் எனது நன்றி” என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன், “விராட் கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், அவருடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம். விராட் கோலி மீது நிறைய அழுத்தம் உள்ளது. அதனாலேயே அனைவரின் கவனம் அவர் மேல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.