பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல என்ற வசனத்தைப் போல, பெயரைக் கேட்டாலே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் செட்டிநாடு உணவுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. அந்த அளவுக்கு மக்களைத் தன் சுவையால் கட்டிப்போடும் செட்டிநாடு உணவு வகைகள் நீண்ட கால பாரம்பரியம் மிக்கவை; உடல்நலத்துக்கும் உறுதுணை செய்பவை. அவற்றில் ஒன்று இந்த முருங்கைக்காய் மசாலா.
**என்ன தேவை?**
முருங்கைக்காய் – 5
தக்காளி – 3
வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
வேகவைத்த பாசிப்பருப்பு – 3 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
**தாளிக்க**
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கி அரைவேக்காடாக வேகவைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பூண்டை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து நன்றாகச் சிவந்தபின் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கியபின் சாம்பார் பொடியைப் போட்டு கிளறி, வேகவைத்த முருங்கைக் காயைச் சேர்க்கவும். பிறகு உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி மூடி, அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய்க் குழம்பு!](https://minnambalam.com/public/2021/01/28/1/valaikai-kulambu)�,