இருவரும் சந்திக்கலாம்… : கிங்காங்கிற்கு உறுதி அளித்த ரஜினி

Published On:

| By Balaji

நடிகர் கிங்காங் பேட்டி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவரை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இருவரும் சந்திக்கலாம் என்று உறுதியளித்துள்ளார்.

நடிகர் ரஜினி நடிப்பில் 1990ல் வெளியான திரைப்படம் அதிசய பிறவி. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கிங்காங். இந்த படத்திற்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு மொழிகளில் அவர் நடித்திருக்கிறார். விஜய், அஜித் என நட்சத்திரங்களின் படங்களில் அவர் நேரடி காட்சிகள் மூலம் நடிக்கவில்லை என்றாலும் வடிவேலுடன் இணைந்து அதிக காட்சிகளில் நடித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளி நடிகரான இவருக்குக் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, தேசிய விருது வழங்கப்பட்டது. குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டீல் கையில் தேசிய விருதைப் பெற்றார். மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக அவரது திறமையைப் பாராட்டி இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த சூழலில், யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த கிங்காங் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். அதில், ரஜினியுடன் தான் இணைந்து நடித்தது குறித்தும், அதிசயப் பிறவி படப்பிடிப்பின் போது எல்லோரிடமும் ரஜினி கேஷுவலாக பேசுவார். சிறப்பாக நடிப்பதாக எனக்குப் பாராட்டும் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டிருந்த அவர், ரஜினி சாரை பார்ப்பதற்குப் பலமுறை முயன்றும் அவரை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு பெற்ற தேசிய விருதை, ரஜினி சாரிடம் காண்பித்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. இதற்காகப் பலமுறை முயன்றும் பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இவர் கூறிய அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில், ரஜினி ரசிகர்களால் பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரஜினி கவனத்துக்கும் சென்றுள்ளது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 11) காலை கிங் காங்கை தொடர்பு கொண்டு ரஜினி பேசியுள்ளார். நீங்கள் பலமுறை என்னைப் பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்த போது, எனக்கு அது சரியாக வந்து சேரவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காலம் முடிந்து அனைத்தும் சரியானவுடன் ஒருநாள் சொல்கிறேன் குடும்பத்துடன் வாருங்கள் என்று ரஜினி உறுதியளித்துள்ளார்.

இது கிங்காங் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share