அதிரடி அனுபவத்துக்கு தயாராகுங்கள்: கேஜிஎப் படக்குழு!

Published On:

| By admin

ஏப்ரல் 14ஆம் தேதி ‘கே.ஜி.எஃப் பாகம் 2’ படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு உள்ளநிலையில், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாண்டன் டப்பிங் பேசிய போது எடுத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, அதிரடிக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் பாகம்-1’. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் வரவேற்பும், வசூலும் கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப். பாகம் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளும் ஏறக்குறைய முடிந்துள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ‘கே.ஜி.எஃப். பாகம் 2’ திரைப்படம் ஜுலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிடமுடியவில்லை. இதற்கிடையில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ என பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அடுத்தடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன.

இதனால் ‘கே.ஜி.எஃப் பாகம்- 2’ படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். பாகம்- ’ 2 படத்தில் ராமிகா சென் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீணா தாண்டன், டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படத்தை, உண்மையான அதிரடி அனுபவத்துக்கு தயாராகுங்கள் என்ற அடைமொழியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share