தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 அன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்”, கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கேஜிஎஃப் சாப்டர் – 2 படமும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
2018 ல் வெளியாகி வெற்றிபெற்ற கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்புக்குரிய படமாக கேஜிஎஃப் இருந்தது. விஜய் படத்துக்கு எதிராக வெளியாகும் கேஜிஎஃப் தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும் என சினிமா வியாபாரிகளால் ஆருடம் கூறப்பட்டது. சர்வதேச அளவில் கேஜிஎஃப் படத்திற்கான வரவேற்பை உணர்ந்த சன் பிக்சர்ஸ் ஏப்ரல் 13 அன்றே பீஸ்ட் படத்தை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 800க்கும் அதிகமான திரைகளில் பீஸ்ட் படம் வெளியானது. முதல் நாள் 40 கோடி ஐந்து நாட்களில் 100 கோடி மொத்த வசூல் என்கிற இலக்குடன் களமிறக்கப்பட்ட பீஸ்ட் படம் 37 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. இந்நிலையில் நேற்று கேஜிஎஃப் -2 350 திரைகளில் வெளியானது. நேற்று அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தில் கேஜிஎஃப் வெளியாகி முதல் காட்சி 7 மணிக்கு முடிவடைந்து, பார்வையாளர்கள் வெளிவந்த பின் தமிழ்சினிமா வியாபாரிகள் அதிர்ந்தனர்.
தமிழகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் கேஜிஎஃப் பீவர் அலையாக மாறியது. பீஸ்ட்டை மறந்து அவர்களது முதல் விருப்பமாக கேஜிஎஃப் இருந்தது. ஆனால் அதற்கேற்ப அதிகமான தியேட்டர்கள், காட்சிகள் கேஜிஎஃப் படத்திற்கு கிடைக்காததால் 350 திரைகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நேற்று நடந்து முடிந்துள்ளது.
கூடுதலான திரைகளில் இன்று முதல் கேஜிஎஃப் திரையிடப்படுகிறது என்றார் அப்படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் எஸ்.ஆர். பிரபு. தமிழ்நாடு முழுவதும் முதல்நாள் 8கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது கேஜி எஃப் படத்திற்கு. இது விஜய் படத்தின் வசூலை முறியடித்திருப்பதாகவே கருதப்படுகிறது. 800 திரையரங்குகள், அதிகபட்சமான டிக்கெட் கட்டணம், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என எல்லா அம்சங்களும், வசதிகளும் இருந்தும் 37 கோடி ரூபாய்தான், முதல்நாள் மொத்த வசூல் செய்திருக்கிறது பீஸ்ட். மொழி மாற்று படமான கேஜிஎஃப் 350 திரைகள் குறைவான காட்சிகள், அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனையில் பீஸ்ட் பீவருக்கு எதிராக எட்டுக்கோடி வசூல் என்பது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் கேஜி எஃப் அலை தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது.
கேஜிஎஃப் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் நல்ல பாராட்டுகளை ரசிகர்களிடையே பெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ‘ராக்கி பாய்’க்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கே.ஜி.எஃப்2′ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் யஷ் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் பல புதிய சாதனைகளை புரியும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
அதே போல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர், யஷ் மற்றும் படக்குழுவினரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டுக்கும் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிபடுத்தியுள்ளார்.
மூடர் கூடம் இயக்குநர் நவீன், ‘மொத்த படத்தை பேச தேவையில்லை. ஒத்த க்ளைமாக்ஸ் போதும். அந்த அம்மா செண்டிமெண்ட்தான் படத்தோட ஆணிவேர்’ என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
மேலும், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மொத்த ‘கே.ஜி.எஃப்2’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல, இயக்குநர் பிரசாந்த் நீலையும் குறிப்பிட்டு அவரது இயக்கத்துக்கு மிகப்பெரிய ரசிகர் என பாராட்டி உள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸை குறிப்பிட்டு மற்றொரு பிரம்மாண்டமான மைல்கல் வெற்றிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
**ஆதிரா, இராமானுஜம்**