கேரளத்தில் அரசு துவங்கும் ஓடிடி தளம்.. தமிழகத்தில் வருமா?

Published On:

| By Balaji

புதுப்புது முயற்சிகள் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துவருகிறது கேரள அரசு. அதன்படி, திரைத்துறையை முன்னேற்றுவதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை. அதனால், கோடிகளில் முதலீடு செய்யப்பட்ட பெரும்பாலான படங்கள் முடங்கிக் கிடக்கிறது. ரிலீஸ் செய்வதென்பதே பெரும் சிக்கலாக இருக்கும் சூழல் நிலவுகிறது. இந்தச் சிக்கலை சரி செய்ய மலையாளத் திரைப்படங்களுக்கென தனி ஓடிடி தளமொன்றை உருவாக்க மலையாளத் திரை நட்சத்திரங்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், பிரத்யோக ஓடிடி தளத்தை துவங்க இருப்பதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதோடு, அரசு நடத்திவரும் சித்ராஞ்சலி ஸ்டுடியோவை தென்னிந்திய படங்களின் படப்பிடிப்புக்கான இடமாக மாற்றித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கேரளத்தில் 100க்கும் மேல் புதுப்படங்கள் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறதாம். அரசுக்கும் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவருவதால் ஓடிடி திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது கேரள அரசு. ஆக, இந்தப் புதிய ஓடிடி வருகிற நம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகமாகிறது.

இந்த முயற்சியை வரவேற்று இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார். “ இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம்.. அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி OTT தளம் அவசியம்.” என்று கூறியுள்ளார்.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளமென்பது தேவையிருக்காது. ஆனால், சின்ன பட்ஜெட்டில் உருவாகும் அதிகமானப் படங்களுக்கு ஓடிடி ரிலீஸ் அவசியமாகிறது. அதற்கு சில காரணங்களும் இருக்கிறது. என்னவென்றால், தமிழில் குறைவான எண்ணிக்கையிலேயே ஓடிடி தளங்கள் இருக்கிறது. ஆனால், நூறுக்கும் மேல் படங்கள் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. ஓரளவுக்கு மட்டுமே படங்களை ஓடிடி தளங்களால் வாங்க முடியும். அதனால், பெரும்பாலான படங்களுக்குத் திரையிட தளம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. அதோடு, சின்ன பட்ஜெட் படங்களை குறைந்த விலைக்கே ஓடிடி தளங்கள் வாங்க முன்வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது.

மாஸ்டர், கர்ணன் படங்களை மனதில் கொண்டு ஆய்வு செய்தால், இன்றையக் காலக்கட்டத்தில் திரையரங்கில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு இல்லை. தியேட்டருக்கு வர மக்கள் அச்சம் கொள்ளும் சூழலில், ஓடிடி தளம் மிகப்பெரிய ஆறுதலான ஒன்று தான்.

கேரளத்தில் முடிவு எடுக்கப்பட்டது போல தமிழகத்திலும் அரசே ஓடிடி தளத்தை துவங்குமா? அப்படித் துவங்கினால் திரையரங்க உரிமையாளர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. அதோடு, படத்துக்கு விலை நிர்ணயிப்பதிலிருந்து மக்களுக்கு ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வரை நடைமுறைபடுத்தப்படும் விதிமுறைகள் எப்படி இருக்கும் என்பதையும் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share