தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் இன்று(23.12.19) நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேசிய விருதுகளை குடியரசு தலைவர் வழங்குவதே வழக்கம். ஆனால், இம்முறை குடியரசு தலைவருக்கு பதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில், மகாநடி படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற கீர்த்தி சுரேஷும், KGF படத்தில் சிறந்த ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்ட விருது, தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக அறிவிக்கப்பட்டது. இதில் உத்திரகாண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது. ஷூட்டிங் எடுக்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, படமெடுப்பதை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலங்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த நடிகருக்கான விருது அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குரானா, உரியின் விக்கி குஷால் ஆகியோருக்கும், சிறந்த நடிகைக்கான விருது மகாநடி(நடிகையர் திலகம்) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனராக உரி திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்ய தார் விருதினை பெற்றுக்கொண்டார். சிறந்த கல்வி திரைப்படத்துக்கான விருது கன்னட திரைப்படமான ‘சரளா விரளா’வுக்கு வழங்கப்பட்டது.
கன்னட சினிமாவின் முகத்தை மாற்றியமைத்த KGF திரைப்படம் சிறந்த ஆக்ஷன் படத்துக்கான விருதை வென்றது. மேலும், இந்தப் படத்தில் சிறப்பான சண்டை காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோருக்கு சிறந்த ஸ்டண்ட் காட்சிக்கான விருது வழங்கப்பட்டது. இரட்டையர்களான அன்பறிவ் சேர்ந்தே மேடை மீது வந்து விருதினை பெற்றுச் சென்றனர். சிறந்த சமூக திரைப்படமாக பத்மன் திரைப்படமும், சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பாரம்’ திரைப்படமும் விருது பெற்றது. சிறந்த ஆடை வடிவமைப்பு மகாநடி படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒலியமைப்பு உரி படத்திற்கும், சிறந்த இசையமைப்பு (பின்னணி இசை) சஞ்சய் லீலா பன்சாலிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடலாக நதிச்சிரமி(கன்னட மொழி) தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த இந்தி திரைப்பட விருது அந்தாதூன் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த தெலுங்கு படமாக மகாநடியும், சிறந்த வசனத்துக்கான விருது தாரிக் படத்திற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.ரோஹித்(கன்னடம் ), சமீப் சிங்க்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரோஹி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி) ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
தேசிய விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசளிக்க முடியவில்லை என்றாலும், விருது பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.
திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார். உடல்நலக்குறைவால் அமிதாப் பச்சனால் நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்பதை ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார் அமிதாப்.
�,”