தமிழக அரசியல் ஊடக வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக விவாத பொருளாக இருக்கும் பெயர் இயக்குநர் கரு பழனியப்பன்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவரது மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு பொங்கல் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடிக்கப்பட்டார் எனவும் அதற்கு காரணமான கரு பழனியப்பன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் ‘ஆண்டவர்’ எனும் பெயரில் படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம்2003 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் கரு பழனியப்பன். ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார். நாத்திகவாதியான அவர் இப்படத்துக்கு ‘ஆண்டவர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
பார்த்திபன் கனவுக்குப் பின்னர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை,சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய படங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வந்தன.
‘அவர் இயக்கிய படங்களில் சிறந்த படமான ‘சதுரங்கம்’ தயாரிப்பாளரின் நிதிப்பிரச்சனை மற்றும் அப்பட ஹீரோ ஸ்ரீகாந்தின் ஒத்துழைப்பின்மையில் சில வருடங்கள் தாமதாக வந்து வெற்றிபெறவில்லை .
மந்திர புன்னகை படத்தில் கதாநாயகனாக நடித்ததை அடுத்து புதுமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் ‘கள்ளன்’படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் சரியாக 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களான யுவன் ஷங்கர் ராஜா, வேல்ராஜ், கே.எல்.பிரவீன், ராஜீவன் ஆகியோர் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
நாயகன்,நாயகி மற்ற நடிகர்கள் டெக்னீஷியன்கள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அப்படத்தைத் தயாரிக்கும் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
�,