இயக்குநர் கார்த்திக் நரேன் தன்னுடைய படத்தை வாங்கும்படி எலானிடம் கேட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அதன் பிறகு, ‘மாஃபியா’, ‘நவரசா’, மாறன்’ ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘மாறன்’ படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியானது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
இந்த நிலையில், கடந்த 2017ஆவது வருடம் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஷ்ரியா ஷரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் தனது இரண்டாவது படமான ‘நரகாசுரன்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார். படமும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இதை வைத்து தற்போது கார்த்திக் நரேன், எலான் மஸ்க்கிடம் தன் படத்தை வாங்குமாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிக பெரும் பணக்காரரும் ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களுக்கு சொந்தக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். எலான், தனக்கு ட்விட்டர் செயலி மிக பிடித்த ஒன்று என கடந்த 2017இல் ட்வீட் செய்திருந்தார். அதற்கு ஒருவர், ‘அப்போது நீங்கள் ட்விட்டரை வாங்கி விட வேண்டியது தானே?’ என பதிலளிக்க ‘ட்விட்டர் எவ்வளவு விலை இருக்கும்?’ என அப்போதே எலான் கேட்டிருந்தார். இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் தான் இப்போது எலான் ட்விட்டரை வாங்கியதும் இணையத்தில் வைரலானது.
இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து தான், கார்த்திக் நரேன் ‘தயவு செய்து நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கு முன்பு ட்விட்டரை வாங்கியது போல என்னுடைய ‘நரகாசுரன்’ படத்தையும் வாங்கி ரிலீஸ் செய்து விட்டு போங்க. புண்ணியமா போகும்’ என ட்வீட் செய்துள்ளார். கார்த்திக் நரேனின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
**ஆதிரா**
zஎலான் மஸ்க்கிடம் உதவி கேட்ட கார்த்திக் நரேன்
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel