பிரபல நடிகரும், நடிகர் கெளதம் கார்த்திக்கின் தந்தையுமான கார்த்திக், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ்பெற்ற அவர் சில திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த அவர், இறுதியாக தேவ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’ திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு ‘தீ இவன்’ திரைப்படம் உருவாகிறது. படத்தின் இயக்குநர் டி.எம்.ஜெயமுருகன் கூறும்போது, “அண்ணன் தங்கை உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்வதாக இந்தத் திரைப்படம் அமையும். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும்.” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார்
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”