xபுனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது !

Published On:

| By Balaji

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் 29ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் புனித் ராஜ்குமார் மரணம் இந்திய திரையுலகம் மற்றும் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது.

அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இரங்கல் கூட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு, புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல நிறைய மக்கள் பணி செய்தவர். அதனால் தான் அவருக்கு அரசு மரியாதை தரப்பட்டது, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அரசு பராமரிக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் சித்தராமய்யா புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும், என்றார்.

1992 ஆம் ஆண்டு முதல் தத்தமது துறைகளில் சாதனை புரிந்ததற்காக

வழங்கப்படும் கர்நாடக ரத்னா விருது இதுவரை ஒன்பது சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஐம்பது கிராம் தங்க பதக்கம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் சால்வையுடன் வழங்கப்படும் கர்நாடக ரத்னா விருது ஏற்கனவே புனித் ராஜ்குமார் தந்தை ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share