மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் இரண்டாவது படம் ‘கர்ணன்’. லால், ரெஜிஷா விஜயன், யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை, தாணு தயாரித்துவருகிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்தப் படத்துக்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
கர்ணன் படத்திலிருந்து முதல் சிங்கிள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. அந்தப் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ பெரியளவில் வைரலானது. தொடர்ந்து, இரண்டாவது சிங்கிளான ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
கர்ணன் படமானது திரையரங்கில் வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்துக்கான டிவி ஒளிபரப்பு உரிமைக்கு பெரும் போட்டி நிலவியது. கடும் போட்டிக்கு நடுவில் பெரும் விலைக்கு ஜீ தொலைக்காட்சி நிறுவனம் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல். அதோடு, இப்படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் 10 கோடி ரூபாயை இந்நிறுவனம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கையில், நிச்சயமாக பெரும் விலைக்கு தான் விலைபோயிருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– தீரன்
�,