டீஸர் ரிலீஸ் அறிவிப்பு.. கர்ணன் கடந்து வந்த பாதை !

Published On:

| By Balaji

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீஸர் ரிலீஸ் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, கர்ணன் படத்தின் இதுவரைக்குமானப் பயணத்தைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறியப்பட்டவர் மாரி செல்வராஜ். இவருக்கு இரண்டாவது படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நவம்பர் 13ஆம் தேதி 2018ல் தனுஷ் ஒரு ட்விட் தட்டிவிட்டிருந்தார். அதில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தினைப் பார்த்தேன். மிரண்டுவிட்டேன். என்னுடைய அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்” என்று அறிவித்தார். அந்த இடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் படப்பிடிப்பானது டைட்டில் அறிவிப்புடன் துவங்கியது. கடந்த, 2020 ஜனவரி 05ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘ #கர்ணன் #Karnan – அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்..” என்று பதிவிட்டிருந்தார். படத்தின் தலைப்பையும், பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறித்தார்.

கொரோனாவுக்கு முன்பே ராஜபாளையம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திமுடித்திருந்தது படக்குழு. அவ்வப்போது, படத்திலிருந்து வெளியாகும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. கர்ணன் படத்தின் டைட்டில் அறிவிப்புக்குப் பிறகுதான், சிவாஜி ரசிகர்கள் கர்ணன் பெயரை பயன்படுத்தக் கூடாது என முட்டுக்கட்டைப் போட்டார்கள். அதன்பிறகு, ஒருவழியாகப் பேசி சரிசெய்தது படக்குழு.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு, கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்தது படக்குழு. அதன்பிறகு, அவ்வப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில், கர்ணன் படத்திலிருந்து முதல் சிங்கிள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. அந்தப் பாடல்தான், ‘கண்டா வரச்சொல்லுங்க’. கர்ணன் அழைப்பு எனும் பெயருடன் வெளியான இப்பாடலை சந்தோஷ் நாராயணனுடன் நாட்டுப்புற பாடகி மாரியம்மாள் இணைந்துப் பாடியிருப்பார். இப்பாடலை மாரி செல்வராஜ் எழுதியிருந்தார்.

தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் பண்டாரத்தி புராணம். தேவா குரலில் யுகபாரதி எழுத்தில் கேட்பவர்களின் உள்ளுக்குள் புது அனுபவத்தை விதைத்தது. நாட்டுப்புற பாடலுக்கு தேவாவின் குரல் மிகச்சிறந்த தேர்வு என பாராட்டையும் பெற்றது.

கர்ணன் படத்திலிருந்து வெளியான மூன்றாவது பாடல் தான், ‘திரெளபதையின் முத்தம் ’. திரெளபதையின் முத்தம் எனும் தலைப்பில் ‘தட்டான் தட்டான்’ எனும் பாடலை தனுஷ் பாடியிருந்தார். தனுஷூடன் மீனாட்சி இளையராஜா எனும் பாடகியும் இணைந்து பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடலுமே பெரிய ஹிட்டானது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டீஸரை வருகிற மார்ச் 23ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் ட்விட்டரில் ‘கர்ணன் புறப்பாடு’ என ட்விட் செய்து அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

– ஆதினி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share