சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விஸ்வாசம்.
இந்த வருடம் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளிவந்த இந்தத் திரைப்படம், படைப்பு ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
அப்பா-மகள் உறவுப் பிணைப்பைப் பற்றிக் கூறிய விஸ்வாசம் படத்தின் ‘கண்ணானக் கண்ணே’ பாடல் மிகவும் பிரபலமடைந்தது. சித் ஸ்ரீராம் பாடியிருந்த இப்பாடலுக்கான வரிகளை தாமரை எழுதியிருந்தார். மகளுக்காக அப்பா பாடும் தாலாட்டாக அமைந்திருந்த அந்தப்பாடல் கேட்போர் அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்த நிலையில் யூடியூபில் வெளியாகியிருந்த அந்தப் பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அந்தப்பதிவில், ‘கண்ணான கண்ணே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்க வைத்த ரசிகர்களுக்கு நன்றிகள். இந்தப்பாடல் நிஜமாகவே அத்தனை இதயங்களைச் சம்பாதித்துவிட்டது. முறிந்து போன பல உறவுகளை மீண்டும் இணைய வைக்க இந்தப்பாடல் உதவி புரிந்தது என்பதை உங்கள் மெசேஜ்களின் மூலமாக உணர்ந்து கொண்டேன். எனது இசைப்பயணத்தின் சிறந்த தருணமாக இந்தப்பாடலை மாற்றி விட்டீர்கள். சாதி, மதம், சமயம், நிறம் அன அனைத்தையும் தாண்டி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அளவுகடந்த அன்பைப் பரிமாறுகிறேன்.’ என்று அவர் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
�,”