தேர்தல் வேண்டாம் மீண்டும் மோடியே பிரதமர்: கங்கனாவின் சகோதரி

Published On:

| By Balaji

அடுத்த பொதுத்தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரியான ரங்கோலி சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவரது பதிவுகளும், கருத்துக்களும் பலநேரங்களில் விவாதங்களிலும் சிக்கி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர், முன்பை விட முழுநேரமும் சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், ‘நாம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் மோடிஜி நமது பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவார். எனவே தேர்தலை நடத்தி கோடிக்கணக்கில் பணம் செலவு செய்வதை விடவும் பொதுத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் அவரையே பிரதமராக்கி நம்மை வழிநடத்த வைக்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார். மேலும் ‘தேர்தல் நடத்தி தேவையில்லாமல் வளங்களை வீணடிப்பதை விடவும் இந்த புரட்சிகரமான முடிவை நாம் எடுப்பது சிறப்பாக இருக்கும்’ என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ரங்கோலியின் இந்தப்பதிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ‘இரண்டு வருடங்களில் பொருளாதார நிலை சரி செய்யப்படும் என்றால் நான்கு வருடத்திற்கு பின் வரக்கூடிய தேர்தலைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்’ என்றும், ‘கொரோனா வருவதற்கு முன்பாகவே பொருளாதார பிரச்னைகள் ஏற்படுவதற்கு யார் காரணமாக அமைந்தார்?’ என்பதாகவும் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் அவரது பதிவிற்கு சிலர் ஆதரவுகளையும் தெரிவித்துள்ளனர்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கடந்த தேர்தலின் போதே கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். மோடி மீண்டும் பிரதமர் ஆனதைத் தனது குடும்பத்தினருக்கு விருந்து வைத்து கொண்டாடும் அளவிற்கு கங்கனா மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel