நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஃஹத் பாசில் ஆகியோரை இயக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. 110 நாட்களுக்கு பிறகு ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நேற்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என முன்பு எதிர்ப்பார்த்திருந்த நிலையில் படம் வெளியாகும் தேதியை இந்த மாதம் அதாவது மார்ச் 14ம் தேதி காலை 7 மணிக்கு படக்குழு அறிவிக்க இருக்கிறது.
‘விக்ரம்’ படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 9 மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிந்துள்ளது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகைகளான மைனா நந்தினி, ஷிவானி உள்ளிட்ட மூன்று பேர் நடிக்கின்றனர். கமல்ஹாசன் இதில் கண்பார்வை அற்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. நடிகர் நரேனும் இதில் நடித்துள்ளார். பஅனிருத் இசையமைத்துள்ளார்.
கொரோனா காரணமாக பல நாட்கள் இதன் படப்பிடிப்பு தள்ளி போய் தாமதமானது. இதன் காரணமாகவே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தன்னால் பிறரது வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**