ரஜினி, விஜய்யுடன் கூட்டணி : கமல் பதில்!

Published On:

| By admin

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம்’. நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் 5 நாட்களுக்குள்ளாக படத்தின் உலகளாவிய மொத்தவசூல் 200 கோடி ரூபாயை கடந்திருக்கிறது
இந்த வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், உதவி இயக்குநர்களுக்கு டி.வி.எஸ். அப்பாச்சி இரு சக்கர வாகனம், ‘ரோலக்ஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு விலையுயர்ந்த ‘ரோலக்ஸ் வாட்ச்’ என்று படக் குழுவினர் அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன்.

நேற்று தேனாம்பேட்டை ‘ஹயாத்’ ஹோட்டலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்.

அப்போது அவர், “இந்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் சில்வர் ஜூப்ளி உட்பட பல வெற்றிகள் எனக்குக் கிடைத்திருந்தாலும் அது அமைதியாக நடந்திருக்கிறது. ஆனால், இப்போது எது செய்தாலும், தும்மினாலும் அது பீரங்கி வெடித்த சத்தம்போல் பிரதிபலிக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஊடகங்களின் எண்ணிக்கைதான்.

’அபூர்வ சகோதரர்கள்’ பட வெற்றியின்போதும் நான் இதேபோல் சந்தோஷமாகத்தான் இருந்தேன். அந்தப் படம் ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்திக்குச் சென்றது. அங்கும் அந்தப் படம் வெற்றி பெற்றது. ’அவ்வை சண்முகி’ படமும் இந்திக்குச் சென்று வெற்றி பெற்றது. இப்போது, ’ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி, இந்த ’விக்ரம்’ படம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நான் மும்பைக்குச் சென்றிருந்தபோது, ’தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் வட இந்திய சினிமாவில் இருக்கிறதே?’ என்ற தொனியில் கேள்வி கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், ’சூரியன் உதிப்பதிலேயே ‘உத்ராயணம்’, ’தட்சணாயணம்’னு நேரக் கணக்கு இருக்கு. அது மாதந்தோறும் மாறி மாறித்தான் வரும். என்னைப் பொறுத்தவரை இந்திய படம் வெற்றி பெற்றது என்றுதான் நாங்கள் நினைப்போம். நாங்கள் ’ஷோலே’ படத்தையும் ’ஆராதனா’வையும் அப்படித்தான் பார்த்தோம். அப்போது மொழி தெரியாமல், சப் டைட்டில்கூட இல்லாமல் பார்த்தோம்…” என்றார்.

தொடர்ந்து “ரஜினியுடன் நீங்கள் இணைந்து நடித்து பல வருடங்களாகிவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்கள் இருவரும் இணைந்து நடிப்பீர்களா?…” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, “முதலில் அவரிடம் (ரஜினி) இது குறித்துக் கேட்க வேண்டும். அவர் ஒப்புக் கொண்ட பிறகு இவரிடம் (லோகேஷிடம்) கேட்க வேண்டும். நாங்கள் மூன்று பேரும் ஒப்புக் கொண்ட பின் உங்களிடம்(மீடியா) சொல்ல வேண்டும். நான் எப்போதும் அதற்குத் தயார்தான்.” என்றார் கமல்ஹாசன்.

“இந்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால், ‘மர்ம யோகி’, ‘சபாஷ் நாயுடு’, ‘மருதநாயகம்’ படங்கள் உயிர்ப்பிக்கப்படுமா?” என்ற கேள்விக்கு, “இவ்வளவு காலதாமத்துக்குப் பிறகு எனக்கே அதில் சிரத்தை இல்லை. என்னைப் பொறுத்தவரை புதிது, புதிதாகப் படங்கள் பண்ண வேண்டும் என்று நினைப்பவன். அவை இப்போது எனக்கு பழசாகத் தெரிகிறது. தேவைப்படும் என்றால் அதற்குத் தயாராக இருப்பவர்கள் என்னோடு இணைய வேண்டும். நடிகர் விஜய் நடிப்பில் படம் தயாரிப்பதைப் பற்றி கேட்டபோது, “அது பற்றிப் பேசியிருக்கிறோம். அதற்கான கதை வேண்டும். அவருக்கும் நேரம் வேண்டும். காத்திருக்கிறோம்..” என்றார் கமல்ஹாசன்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share