மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் நடிகராக அறியப்பட்ட கமல்ஹாசன் அரசியல் தலைவராக மாறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், மக்களின் தீர்ப்பு வேறொன்றாக இருந்தது. அரசியலில் ஏற்பட்ட சறுக்கலினால் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடித்து 2018இல் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது. அதன்பிறகு, மூன்று வருடங்களாக எந்தப் படமும் கமல்ஹாசனுக்கு வெளியாகவில்லை. அதையெல்லாம் நேர் செய்ய அடுக்கடுக்காகப் படங்களை கமிட் செய்து வருகிறாராம் கமல்ஹாசன்.
ஆக்ஷன் ஹீரோவாகவோ, டூயட் பாடும் ஹீரோவாகவோ கமல்ஹாசன் படங்கள் இனி இருக்காது என்கிறார்கள் கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தினர். முதிர்ச்சியான ரோல்களில் நடிக்க திட்டமாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினியின் ஃபார்முலாவைப் பின்பற்ற இருக்கிறாராம். அதாவது, வயதுக்கேற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்ய இருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தியன் 2 படம் முக்கால் பாகம் முடிந்துவிட்டது. ஷங்கருக்கும் லைகாவுக்கும் நடுவிலான கருத்து மோதலால் படம் சிக்கலில் இருக்கிறது. விரைவிலேயே படத்துக்குத் தீர்வு எட்டப்படும். படமும் தயாராகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியன் 2 படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆக்ஷன் டிராமாவாக இருக்கும். மலையாள நடிகர் ஃபகத், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒரு ஹீரோவுக்கு எக்கச்சக்க வில்லன்கள் என கதைகளம் இருக்குமாம்.
இந்தப் படத்துக்குப் பிறகு, கமலுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த பாபநாசம் பட இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகமானது சமீபத்தில் பிரைம் வீடியோவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு, இந்தி ரீமேக்குகள் தொடங்கிவிட்ட நிலையில், பாபநாசம் 2-வுக்கும் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது. 40 நாட்களில் முடிக்கும் விதமாகப் படத்தைத் திட்டமிட்டிருக்கிறார் கமல். கெளதமிக்குப் பதிலாக நதியா அல்லது சிம்ரன் என மூத்த நடிகையை நடிக்க வைக்கவும் திட்டம்.
அடுத்ததாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் நடிக்கவும் இருக்கிறாராம் கமல். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் – கமல் சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியும் இணைகிறது.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கமலைச் சந்தித்தார் வெற்றி மாறன். திரைப்படச் சட்டத் திருத்தம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டுமென கமலைச் சந்தித்துப் பேசினார் வெற்றி மாறன். அந்த நேரத்தில் கதை இருக்கிறதா எனவும் கேட்டிருக்கிறார் கமல். வெற்றி மாறனும் நாவலை மையமாகக் கொண்டு ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதாக உறுதியளித்திருக்கிறார். அதனால், வெற்றி மாறன் இயக்கத்தில் கமல் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, கமல்ஹாசன் நடித்து இயக்க இருக்கும் படம் ‘தலைவன் இருக்கின்றான்’. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படமும் கமலின் லைன் அப்பில் இருக்கிறது. ஆக, ஆறு படங்கள் கமலுக்கு அடுத்தடுத்து உருவாக இருப்பதால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சினிமாவில் கொஞ்சம் பிஸியாக இருப்பார் கமல்.
**- தீரன்**
�,