கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் லைகா நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பூந்தமல்லியில் ’இவிபி’யில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பின் போது, அனைவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தைத் தயாரித்து வரும் லைகா நிறுவனத்துக்குக் கமல் கடிதம் எழுதியுள்ளார். அதில், மிகுந்த மன வேதனையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நம்முடன் சிரித்துப் பேசியவர்கள் இன்று இல்லை. விபத்தின் போது மயிரிழையில் உயிர்த் தப்பினேன். என்னுடைய வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது, இனி படப்பிடிப்பின் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும். படப்பிடிப்பில் இதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதற்குத் தயாரிப்பு நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்தி, படக்குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்திப் படப்பிடிப்புக்குத் திரும்ப வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சையும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் கமல்.
**கவிபிரியா**�,