மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், இந்தியன் 2 விபத்து குறித்து நடந்த விசாரணை பற்றி நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி துணை ஆணையர் நாகஜோதி முன்பு இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி இன்று(மார்ச் 3) காலை 10 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் ஆஜரானார். இது தொடர்பாக நமது மின்னம்பலம் மொபைல் தினசரியில் [இந்தியன் 2 விபத்து: கமலிடம் விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/03/37/Indian-2-accident-kamal-appears-before-police) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேசினார். அவர் பேசும்போது, **“நான் இழந்த மூன்று சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை எண்ணி இங்கே காவல்துறைக்கு நடந்த சம்பவங்களின் கோர்வையை எனக்குத் தெரிந்த அளவில் எடுத்துச் சொல்வதற்கும், எங்கள் துறையில் இனி இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளின் முதற்கட்ட முயற்சியாகவே இந்த கலந்துரையாடலை நான் கருதுகிறேன். நேற்று சினிமா துறையைச் சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து இது பற்றி பேசினோம். அதனின் தொடர்ச்சியாக இங்கேயும் காவல்துறைக்கு அங்கு நடந்த சம்பவங்களையும், இனி இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஏதாவது கருத்துக்கள் இருப்பின் அதையும் நாங்கள் வந்து கேட்டு தெரிந்துகொள்கிறோம் என்பதையும் அவர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன்.** என்று கூறினார்
மேலும் **“கூடிய விரைவில் எங்கள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் சந்திக்கவிருக்கிறோம். அந்த சந்திப்பின் விளைவுகளை, விவரங்களை உங்களுக்கு நான் கண்டிப்பாக இது போன்று கூறுவேன்”** என்றும் அவர் தெரிவித்தார்.
**-இரா.பி. சுமி கிருஷ்ணா**�,