நடிகர் சூர்யாவுக்கு ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரித்து இருக்கிறது . படத்தின் வெற்றியில் கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ்ஜூக்கு இந்த வெற்றிக்கு நன்றி சொல்லி தன் கைப்பட எழுதிய கடிதம் மற்றும் நேற்று லெக்சஸ் இ எஸ் 300 காரையும் அவர் பரிசளித்துள்ளார். மேலும் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு அப்பாச்சி பைக்கையும் கொடுத்துள்ளார்.
’விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும் படத்தின் இறுதியில் வரும் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடைசி நேர அழைப்பை ஏற்று நடிகர் சூர்யா சம்பளம் எதுவும் வாங்கி கொள்ளாமல் அன்பிற்காக மட்டுமே வந்து நடித்து கொடுத்தார் எனவும் நேற்று கமல்ஹாசன் வீடியோவில் பேசினார். இப்போது ‘ரோலக்ஸ் சார்’ருக்கு கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், தான் கட்டியிருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தையும் கமல்ஹாசன், சூர்யாவுக்கு பரிசளித்து தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘இது போன்ற தருணங்கள் தான் வாழ்வை அழகானதாக்குகிறது. நன்றி கமல் அண்ணா’ என சூர்யாவும் கமலின் இந்த ரோலக்ஸ் அன்பளிப்புக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் கமல்ஹாசன் விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் அனிருத்துக்கு என்ன பரிசு கொடுப்பார் என எதிர்ப்பார்த்து உள்ளனர்.
**ஆதிரா**