A
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டுப் பாராட்டினர். சமீபத்தில், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிவி உரிமை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கலைஞர் டிவி வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வெற்றிபெற்ற ஜெய் பீம் போன்ற புதிய படங்களை வாங்குவதற்கு கடும் போட்டி இருக்கும். ஆனால், படத்துக்கு எதிராக சாதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தப் படத்தை வாங்குவதற்கு விஜய், ஜீ போன்ற தொலைக்காட்சிகள் ஆர்வம்காட்டவில்லை. டிவியில் ஒளிபரப்பாகும் போது ஏதும் சிக்கல் வரலாம் என்பதே காரணம் என்கின்றனர். இந்த நிலையில், ஆளும்கட்சியின் கலைஞர் டிவி துணிச்சலாக ஜெய் பீம் படத்தை சுமார் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். வருகிற பொங்கல் தினத்துக்கு டிவியில் ஒளிபரப்பாகுமாம்.
**-அம்பலவாணன்**
�,