தமிழில் எதிர்பார்க்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். நடுவே தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்துகிறார்.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். தற்போது இவரின் காட்சிகளுக்கானப் படப்பிடிப்பு வருகிற மார்ச் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. ஏற்கெனவே சிரஞ்சீவியுடன் ‘கைதி நம்பர் 150’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஷெட்யூலில் காஜலுக்கான முழு காட்சிகளையும் படமாக்கி முடிக்க இருக்கிறார்களாம். இந்தப் படப்பிடிப்புக்காக தர்மஸ்தலா கோயிலையே செட் போட்டு படமாக்குகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அரசியல் டிராமாவாக படம் உருவாகிறதாம். தச்சராக இருக்கும் நாயகன் சமூகத்தின் காவலனாக மாறும் மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்கும்.
கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் படத்தில் நடித்திருக்கிறார். நக்சலைட்டாக படத்தில் வருகிறாராம். அதோடு, இந்தப் படத்தை கொரட்டல சிவா இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்ட நட்சத்திரங்களும் காஜலுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான், இந்தியன் 2 தொடங்கும் என்கிறார்கள். ஆச்சார்யா படப்பிடிப்பு முடியவும், இந்தியன் 2 தொடங்கவும் சரியாக இருக்கும் என்பதால், சிரஞ்சீவியின் படத்தை முடித்துவிட்டு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2வில் வந்து இணைகிறார் காஜல் அகர்வால்.
தெலுங்கில் இந்தப் படம் மட்டுமின்றி, மஞ்சு விஷ்ணுவின் சைபர் க்ரைம் படமான ‘மொசகல்லு’ படத்திலும் நடித்துமுடித்திருக்கிறார் காஜல். அதுபோல, தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹே சினாமிகா படங்களும் ஏற்கெனவே முடிந்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இந்தியில் மும்பை சகா படமும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் பட்டியலில் சில கொரோனாவுக்கு முன்பே முடிந்துவிட்ட படங்கள் ரிலீஸாக முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் எல்லா மொழிப் படங்களுமே, இந்த வருட ரிலீஸை எதிர்நோக்குவதால் காஜல் அகர்வாலின் மார்க்கெட் இந்தியளவில் உயரும். காஜல் அகர்வாலின் கைவசமிருக்கும் இந்த ஆறு படங்களின் ரிலீஸினால், அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் குவியும். அதைத்தான், காஜலும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
**- ஆதினி**
�,