திருமணத்துக்கு முன்பு வரை கொத்துக்கொத்தாகப் படங்களில் நடிக்கும் நடிகைகள், திருமணமாகிவிட்டால் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகுதான் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார் என்பது ஆரோக்கியமான விஷயமே.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் புதிதாக ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். பிரபு தேவா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் காஜல். பிரபு தேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர் கல்யாண். இவர் இயக்கும் அடுத்த படத்தில்தான் காஜல் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபு தேவாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதோடு, திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் முதலாவதாக ஒப்பந்தமாகும் படம் இது .
படம் குறித்து விசாரித்தால், ரொமான்டிக் காமெடி ஜானராக இருக்கும் என்று சொல்கிறார்கள். விரைவிலேயே அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். முன்னதாக, யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டீகே இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருந்தார்கள். ஆனால், ஹாரர் த்ரில்லராக உருவாக இருந்த அந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் அதன் பிறகு வரவில்லை.
காஜலுக்கு இறுதியாக ஜெயம் ரவியுடன் கோமாளி ரிலீஸானது. தற்பொழுது கைவசம் ‘ஹே சினாமிகா’, ‘ஆச்சார்யா’, ‘மும்பை சகா’, ‘இந்தியன் 2’ மற்றும் ‘பாரிஸ் பாரிஸ்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த வரிசையில் பிரபு தேவாவுடன் நடிக்கவிருக்கும் படமும் இணைகிறது.
பிரபு தேவா நடிப்பில் உருவாகும் 50ஆவது படமான ‘பொன்.மாணிக்கவேல்’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வெளியாகலாம். அதோடு, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘பஹீரா’ மற்றும் ‘ஊமை விழிகள்’ படங்கள் இவருக்கு கைவசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
**ஆதினி**�,