dகாடன், கபடதாரி படங்களின் ரிலீஸ் தேதி !

Published On:

| By Balaji

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தயார் நிலையில் இருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறது. வருகிற ஜனவரி 13ஆம் தேதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படமும், ஜனவரி 14ஆம் தேதி சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படமும் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து, சிபிராஜ் மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகுபலி நாயகனின் காடன் :

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். தொடர்ந்து, விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் கும்கி பெரிய ஹிட்டானது. அதன்பிறகு இவருக்கு படங்கள் பெரிதாக போகவில்லை. அதனால், மீண்டும் காடு சார்ந்த ஒரு கதையாக, உருவாகிவரும் படம் ‘காடன்’. பாகுபலி நாயகன் ராணா லீட் ரோலில் நடிக்க, முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணுவிஷால் நடித்திருக்கிறார். ஈராஸ் நிறுவன தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் 2-ஆம் தேதியே படம் வெளியாகியிருக்க வேண்டியது. கொரோனாவினால் தள்ளிப்போனது. முழுமையாக முடிந்து தயார் நிலையில் இருக்கும் காடன் திரைப்படம் வருகிற மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிராஜ் நடிப்பில் கபடதாரி:

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா லாக்டவுன் துவங்கியது. அந்த நேரம் திரையரங்கில் கடைசியாக ஓடிக்கொண்டிருந்த படம் சிபிராஜ் நடித்த ‘வால்டர்’ தான். வால்டர் படத்தோடு இழுத்து மூடப்பட்ட திரையரங்குகளுக்கு, இப்போது தான் 100% அனுமதி கிடைத்திருக்கிறது. மீண்டும் சிபிராஜ் நடிப்பில் ஒரு படம் வெளியாக இருக்கிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துவரும் படம் ‘கபடதாரி’. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். கொரோனா லாக்டவுனின் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு செப்டம்பரில் மீதி படப்பிடிப்பை முடித்து, படத்தை தயார் செய்துவிட்டனர் படக்குழுவினர். கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு ரிஷி நடிப்பில் வெளியான ‘காவலுதாரி’ படத்தின் ரீமேக் தான், சிபிராஜ் நடித்திருக்கும் இந்த கபடதாரி. இப்படம், ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தின ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share