}பிரியங்கா சோப்ரா ஒரு ‘நயவஞ்சகர்’: நெட்டிசன்கள்!

Published On:

| By Balaji

தம்பதியர் சார்பில் ‘#பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற ஹேஸ்டேக்கை பிரியங்கா சோப்ராவின் கணவர் வெளியிட்டதையடுத்து, பிரியங்காவின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட அறச்சீற்றம்’ போலியானது என நெட்டிசன்கள் அவருக்கு எதிராக பதிவுகள் இட்டு வருகின்றனர்.

வியாழக்கிழமையன்று(ஜூன் 4), பாடகர் நிக் ஜோனாஸ் தனது மனைவி பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது சார்பாக #பிளாக் லைவ்ஸ்மேட்டர் (#BlackLivesMatter) இயக்கத்திற்கு ஆதரவாக டிவீட் செய்தார். பிரியங்காவும் நானும் கனமான இதயத்தோடு உள்ளோம்… இந்த நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் உண்மை வெளிப்படையானது. இனவெறி, மதவெறி மற்றும் புறக்கணிப்பு ஆகியவை நீண்ட காலமாக நடந்து வருகின்றன. அமைதியாக இருப்பது இதை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இதனை தொடரவும் அனுமதிக்கிறது,” என்று அவர் பதிவிட்டார்.

மேலும், “இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். ‘நான் இனவெறி கொண்டவன் இல்லை’ என்று சொல்வது மட்டும் இனி போதாது. நாம் அனைவரும் இனவெறிக்கு எதிராகவும், கறுப்பின சமூகத்தினருடன் நிற்கவும் வேண்டும். உதவி செய்வதற்கான நம் தொடர்ச்சியான முயற்சிகளை நோக்கிய முதல் படியில், நாம் இதனை எதிர்த்துப் போராடுவோம். பிரியங்காவும் நானும் நன்கொடை அளித்துள்ளோம் … நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், நாங்கள் உங்களை நேசிக்கிறோம். #BlackLivesMatter #JusticeForGeorgeFloyd,” என்று அவர் மற்றொரு டிவீட்டில் கூறினார். பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என ஜார்ஜ் ஃபிளாய்டின் கடைசி வார்த்தைகளை பதிவிட்டார்.

அமெரிக்காவில் தீவிரமாகி வரும் போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ராவும் இதன் மூலம் இணைந்துள்ளார். இருப்பினும், சமூக ஊடகங்களில் அவரது கருத்து நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஏனெனில் பல டிவிட்டர் வாசிகளும் ‘அமெரிக்காவில் இனரீதியான அநீதிகளுக்கு எதிராகப் பேசும் இவர், ஏன் சிறுபான்மையினரை இந்தியாவில் தவறாக நடத்துவதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்தார்’ எனக் கூறி அவரை ஒரு “நயவஞ்சகர்” என்று முத்திரை குத்தினர். மேலும் தோல் ஒளிரும் கிரீம்களை பிரியங்கா விளம்பரங்களுக்காக ஊக்குவித்தார் என நெட்டிசன்கள் கருத்தியல் ரீதியாக தாக்கத் துவங்கினர்.

பாடகரும் யூடியூபருமான அம்சி இது குறித்து கூறும்போது, “தோல் ஒளிரும் கிரீம்களை ஊக்குவிப்பதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ பிரியங்காவின் ‘இதயம் கனமாக இருந்ததா? முஸ்லிம்கள் தனது சொந்த நாட்டில் கொலை செய்யப்படுவதைப் பார்த்தபோதும் எதுவும் பேசாமல் இருந்தாரே அப்போதும் ‘அது கனமாக இருந்ததா? உங்கள் திருமணத்திற்கு ஒரு பாசிஸ்டை நீங்கள் அழைத்தபோது அந்நேரம் எப்படியிருந்தது உங்கள் இதயம்? அவரது இதயம் நன்றாகத்தான் அப்போது செயல்பட்டிருக்கும் போல,” என எழுதினார்.

இதே போல பல பதிவுகள் பிரியங்காவுக்கு எதிராக தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. “டெல்லி படுகொலை, ரோஹித் வெமுலா கொலை, நஜீப் அகமது …. போன்றவற்றில் பிரியங்கா குரல் எழுப்பவில்லை. பிரியங்கா போன்றவர்கள் அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவைக் காட்ட ஒரே காரணம், அமெரிக்க தாராளவாத இடைவெளிகளில் அவர்களுக்கு இது வாய்ப்புகளைத் திறக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்” என ஒரு நெட்டிசன் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், யுனிசெஃப் நல்லெண்ண தூதர் பிரியங்கா சோப்ரா, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அவர் வெளியிட்ட டிவீட் தொடர்பாக இதே போன்ற விமர்சனத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share