ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, தான் பெறவேண்டிய ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தைக் குறைத்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோரை நடிகர் ஹரீஷ் கல்யாண் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் நடித்து வந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனக்கு வரவேண்டிய ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை நடிகர் விஜய் ஆண்டனி குறைத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண், விஜய் ஆண்டனிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் தனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் நடிகர் ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா சில தினங்களுக்கு முன்பு தன்னைப் பற்றிய போலியான தகவல்களைப் பரப்பும் இணைய தளங்கள் குறித்து கோபத்துடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு உள்ளிட்டவர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஹரீஷ் கல்யாண் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களுக்குத் தொடர்ந்து உதவிகளை செய்து வரும் சகோதரர் விஜய் தேவரகொண்டாவிற்கு எனது பாராட்டுக்கள். எதிர்காலத்தில் நானும் உங்கள் வழியைப் பின்பற்றுவேன். தெலுங்கு சினிமாத்துறை, தவறான தகவல்களுக்கு எதிராகவும், போலி செய்திகளுக்கு எதிராகவும் இணைந்து போராடி வருகிறது. நாகார்ஜுனா, சிரஞ்சீவி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்கள் இந்த விஷயத்திற்காக ஒன்றிணைந்திருப்பது மிகவும் நேர்மறையான ஒரு விஷயம். இது அவர்களது ஒற்றுமையை நமக்குக் காட்டுகிறது.
நாமும்(தமிழ் சினிமாத்துறை) இவ்வாறு ஒற்றுமையாக இருந்தால் பிரச்னைகளை எளிதில் சமாளிக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி செய்தால் பல தடைகளை தாண்டி வரலாம். குறிப்பாக லாக் டவுன் முடிந்த பின்னர் எழும் பிரச்னைகளை சமாளிக்கலாம். எது நமது சினிமாத் துறையில் பல வியப்பான விஷயங்களைச் செய்யும். சினிமாத் துறையினருக்கு வாழ்க்கை கிடைக்கும்” என்றும் ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”