ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

Published On:

| By Balaji

சூர்யா, ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவன் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜெய்பீம் 2021 தீபாவளி அன்று அமேசான் பிரைமில் வெளியானது. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரம் குறிப்பிட்ட சில சாதி அமைப்புகள், அவர்களுக்கு தலைமை தாங்கும் அரசியல் கட்சியினரால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே சூர்யாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. சூர்யா-ஜோதிகா மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருது வழங்கக் கூடாது என கடிதங்கள் அனுப்பபட்டது.

இப்படிப்பட்ட தொடர் சர்ச்சைகள் ஜெய்பீம் படத்திற்கு கூடுதலான விளம்பரமாக அமைந்தது. திரைப்படங்கள் ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றதில் ‘ஷாஷங் ரிடெம்ப்ஷன்’ ஆங்கில திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’முன்னேறியது.

அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது.

சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இடம்பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share