கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள். அதேபோன்று சிறந்த படைப்புகளுக்கு எத்தனை இடையூறுகள் இருந்தாலும், அதற்குரிய சமூக அங்கீகாரத்தை தடுத்து விட முடியாது என்பதற்கு உதாரணம் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்து வரும் சர்வதேச சமூக அங்கீகாரம்.
திரையரங்கில் வெளியாகாமல் வலைத்தளத்தில் 2021ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது ஜெய்பீம் படம். வெளியான பின்பு, அந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள், பொருட்கள் இவற்றை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சியும், சாதி, மத அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, எதிர்வினை ஆற்றினார்கள்.
தமிழகத்தில் பாமக பரவலாக இருக்ககூடிய 19 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியான பழைய படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட விடாமல் திரையரங்குகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சூழ்நிலையில் நொய்டாவில் நடைபெற்று வரும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய்பீம் படத்துக்கு நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
**இராமானுஜம்**
�,