Xஓடிடி சர்ச்சையில் ஜகமே தந்திரம்!

Published On:

| By Balaji

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும், தனுஷ் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேங்க்ஸ்டர் டிராமா, ஜகமே தந்திரம். மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது. இப்படத்தின் ரிலீஸும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், ஜகமே தந்திரம் படத்தை முன்னணி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் பெரும் தொகையை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் தனுஷிடம் கலந்தாலோசித்த பின்பு தான் இம்முடிவை எடுக்க முடியுமென்றும், அதன் பின்னர், தயாரிப்பாளரின் மனநிலையை புரிந்து கொண்டு ஓடிடி ரிலீஸுக்கு தனுஷ் தலையசைத்ததாகவும் கடந்த இரண்டு நாட்களாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் படக்குழுவினரின் நெருக்கமான வட்டாரம் தமிழ் இந்துவிடம் பேசிய போது, தனுஷின் படங்கள் வரிசையில் இந்தப் படத்தின் பொருட்செலவு அதிகம். லண்டனிலேயே முக்கியமான காட்சிகளை ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். ஆகையால், இந்தப் படம் திரையரங்கில் வெளியானால் மட்டுமே சரியாக இருக்கும். ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்புகள் குறைவு”எனத் தகவல்கள் அளித்தனர்.

நேற்று(ஜூலை 8) இந்தியா டுடேவில் இது குறித்து பேசியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜகமே தந்திரம் படம் தியேட்டருக்கு எடுக்கப்பட்டது. நிச்சயம் தியேட்டரில் தான் ஜகமே தந்திரம் வெளியாகும்” என்றும் கூறியுள்ள அவர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறி உள்ளார்.

அதே சமயம், ஓடிடி வெளியீடுகள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் LetsOTT Global, தனது டிவிட்டர் பக்கத்துல், “தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாவதாக பல செய்திகள் வெளியாகின்றன. தியேட்டர்களைத் தவிர்ப்பதன் மூலம் இப்படம் நேரடியாக OTT இல் வெளியிடுவதற்கு இதுவரை எந்த ஸ்ட்ரீமிங் தளமும் படக்குழுவை அணுகவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்”என நேற்று(ஜூலை 8) பதிவிட்டுள்ளது.

இதன் மூலம், ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன், முன்னுக்கு பின் முரணான செய்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share