தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெகமே தந்திரம் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படத்தில் தனுஷூக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியானது 2016ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால், ரஜினிக்காக தனுஷ் விட்டுக் கொடுத்தார். கார்த்திக் சுப்பராஜ் முதலில் ‘பேட்ட’ இயக்கிய பிறகே, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ரிலீஸ் சென்ற வருடமே திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டியது. கொரோனாவினால் தள்ளிப் போனது. ஒரு படம் தயாராகிவிட்ட நிலையில், ரிலீஸாகாமல் இருந்தால் நிச்சயம் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்படி, இந்தப் படத்தின் செலவினை மனதில் கொண்டு படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் . சமீபத்தில் தனுஷ் கூட ஒரு ட்விட் ஒன்றைப் போட்டிருந்தார். ரசிகர்களைப் போல நானும் திரையரங்கில் ஜெகமே தந்திரம் வெளியாகவே விரும்புவதாகக் கூறினார். அதோடு, தயாரிப்பாளரிடமும் தியேட்டரில் வெளியிட அழுத்தம் கொடுத்தார். ஆனால், எதுவும் வேலைக்காகவில்லை.
தற்பொழுது, ஜெகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. ஏனெனில், படத்தின் டீஸரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. விரைவிலேயே நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தனுஷின் கேரக்டர் பெயர் சுருளி. மதுரையில் பெரிய ரவுடியாக இருக்கும் சுருளி லண்டனில் செய்யும் ஆக்ஷன் அதகளமே படம்.
**டீஸர் வீடியோ **
**- ஆதினி **�,”