ஏலே படத்தை போன்றே மண்டேலா படத்தையும், தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம்தான் ஏலே.
இந்த படம் காதலர் தின ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், வெளியீட்டு நிகழ்வின் போது திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பு நிறுவனத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு படத்தை வழங்கிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை 3.00 மணிக்கு டிவியில் ஒளிபரப்பப்பட்டது ஏலே. இந்த முடிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தர இருக்கிறது. ஏலே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமான மண்டேலா என்ற திரைப்படத்தையும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனராம். பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள மண்டேலா- வில், யோகி பாபு நாயகனாக நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை மடன் அஸ்வின் இயக்கியுள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதன்மை தயாரிப்பாளரான ஒய்நாட் சசிகாந்த் இந்தத் திரைப்படத்தையும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதற்கான, ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாம். மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒய்நாட் ஸ்டுடியோவின் மற்றுமொரு தயாரிப்பான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதியாகியிருப்பதும் நினைவுக்கூறத்தக்கது.
**- ஆதினி**
�,