நடிகராகவும் அரசியல்வாதியாகவும் பரபரப்பாக இயங்கிவருகிறார் உதயநிதி. இவரை அடிக்கடி மக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக, மக்கள் சேவையில் ஈடுபட்டுவருவதால், சினிமாவுக்கு கொஞ்சம் ஸ்டாப் சொல்லிவிட இருப்பதாகத் தகவல்.
தற்பொழுது, மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஆர்ட்டிகிள் 15 ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். பரியேறும் பெறுமாள், கர்ணன் என தொடர்ச்சியாக ஹிட் கொடுத்தவர் மாரிசெல்வராஜ். அடுத்ததாக, துருவ் விக்ரம் நடிக்க கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு படம் இயக்க இருக்கிறார்.
மகிழ்திருமேனி படம், ஆர்டிகிள் 15 படங்களை உதயநிதி முடித்துவிட்டு வரவும், துருவ் படத்தை மாரிசெல்வராஜ் முடிக்கவும் சரியாக இருக்கும். அதன்பிறகு, மாரிசெல்வராஜ் – உதயநிதி கூட்டணி இணைகிறதாம். சமூகம் சார்ந்த அழுத்தமான ஒரு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மாரிசெல்வராஜ் படத்துடன் நடிப்புக்கு விடை கொடுக்க இருக்கிறாராம் உதயநிதி. அதன்பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஒருகல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார் உதய். ரொமான்ஸ் காமெடி ஜானர்களில் எக்கச்சக்கப் படங்களை நடித்தார். கமர்ஷியலுக்கு நடுவே, மனிதன், கண்ணே கலைமானே மற்றும் சைக்கோ உள்ளிட்ட வித்தியாச முயற்சிகளால் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிலிருந்து விலகுவதற்கு முன்பாக, ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சினிமாவை கொடுத்துவிட வேண்டுமென்று விரும்புகிறாராம். அதனால், மாரி செல்வராஜைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
**- தீரன்**
�,