‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகை ஷாலினி நடிக்கிறாரா என்பதற்கு அஜித் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு படமாக உருவாகி வரக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த வருடம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி உள்ளிட்ட இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் நடிகை ஷாலினி அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் எனவும் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது எனவும் தகவல் வெளியானது. இது குறித்து தற்போது அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அளித்துள்ள விளக்கமாவது, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று வெளியாகும் செய்திகள் உண்மையில்லை அது முற்றிலும் வதந்தி. அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை’ என இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலினி தமிழில் கடைசியாக நாயகியாக நடித்த படம் ‘பிரியாத வரம் வேண்டும்’. அதற்கு பிறகு திருமணம் குழந்தை என அவர் தமிழ் சினிமாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நடிக்கவில்லை. இதனையடுத்து அவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்ததும் அவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் இந்த செய்தி தற்பொழுது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளது.
**ஆதிரா**