இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா என்ற கேள்விக்கு படக்குழு தற்போது பதிலளித்துள்ளது.
இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம், ஐஷ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. நாவல் ஆசிரியர் கல்கியின் வரலாற்று புதினம் தமிழ் சினிமாவில் திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பலர் முயற்சித்தும் பல காரணங்களால் அது முடியாமல் போனது.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்திற்கு இசை அமைத்தது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகும். இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியுள்ளது.
800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கோடை விடுமுறையை ஒட்டி முதல் பாகம் வெளியாக இருக்கிறது. லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸூம் இந்த படத்தை தயாரிக்கிறது. படம் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இப்போது மீண்டும் ஓடிடியில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான சிவ ஆனந்த் மறுத்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னரே ஓடிடிக்கு வரும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
**ஆதிரா**