‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசை கோர்ப்பு வேலைகள் முடிந்து விட்டதாக இயக்குநர் செல்வராகவன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் ஒரு பக்கம் இளைஞராகவும் இன்னொரு பக்கம் நடுத்தர வயதுடையவராகவும் இருக்கிறார். இதனால் படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் தனுஷ் வருகிறார் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானே வருவேன்’ படத்தை தொடர்ந்து தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகும். ‘வாத்தி’ படம் தனுஷ் கைவசம் உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேரடியாக தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தவிர்த்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகும் ‘மாறன்’ மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**