நடிகர் ரஜினி மற்றும் கமலை இணைத்து படம் இயக்க விருப்பம் என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
2015ஆம் வருடம் சாய் பல்லவி , நிவின் பாலி நடிப்பில் ‘பிரேமம்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெற்றி அடைந்தது. இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.
இதுமட்டுமில்லாது, நிவின் பாலி நஸ்ரியா நடிப்பில் ‘நேரம்’ படத்தையும் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் தான், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் ரஜினி மற்றும் கமலை வைத்து படம் இயக்க விருப்பம் உள்ளதாகக் கூறி இருக்கிறார்.
அந்த பதிவில் அவர் , ‘ரஜினி சார் அல்லது கமல் சாரை நான் தனியாகச் சந்தித்தால் அவர்கள் இணைந்து நடிக்கும் படியான கதைக்களம் ஒன்றை வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் கூறுவேன். என் கதையை அவர்கள் கேட்டால் நிச்சயம் பிடிக்கும்.
ஆனால், அந்த அதிர்ஷ்டம் என் வாழ்க்கையில் அமையவில்லை. இன்னும் அவர்களை என் வாழ்க்கையில் இன்றைய தேதி வரை சந்திக்காமல் இருக்கிறேன்.
இனி வரும் காலத்தில் ஒருவேளை அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்து அவர்களுக்கும் என் கதை பிடித்து விட்டது என்றால் என்னுடைய எல்லா திறமைகளையும் நான் உபயோகித்துச் சிறந்த படக்குழுவைக் கொண்டு நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமையக் கடினமாக உழைப்பேன்.
நிச்சயம் அந்த திரைப்படம் ரஜினி, கமல் இருவருக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும்’ என கூறியுள்ளார். இது தலைவர் மற்றும் ஆண்டவருடன் எப்போது படம் செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டவர்களுக்கான பதில் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நடிகர் விஜய் பீஸ்ட்’ படத்திற்காக நீண்ட நாட்கள் கழித்துக் கொடுத்திருந்த தொலைக்காட்சி பேட்டியில், அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்க்காக ஒரு கதை கூறினார். அது தனக்குப் பிடித்திருந்தது. ‘சஞ்சய் அதில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், சஞ்சய் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியதால் மறுத்து விட்டேன்’ எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**