2021 சீசனுக்கான ஐபிஎல் அட்டவணையை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 30ஆம் தேதி அகமதாபாத்தில் முடிகிறது ஐபிஎல் 2021.
கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகள் இந்த முறை இந்தியாவிலேயே நடைபெற இருக்கின்றன.
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஐபிஎல் அணிகள் கொண்ட தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் இந்த முறை போட்டிகள் நடக்கவில்லை.
ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. ப்ளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றன.
சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் தலா 10 ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அகமதாபாத் மற்றும் டெல்லியில் 8 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த ஐபிஎல் அட்டவணையின் முக்கிய அம்சமே எந்த அணிக்குமே ஹோம் கிரவுண்டு போட்டிகள் கிடையாது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் எந்தப் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்காது. அதே போல் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் எந்தப் போட்டியும் மும்பையில் நடக்காது.
11 டபுள் ஹெட்டர், ஒரே நாளில் இரண்டு போட்டிகள் மாலை 3.30 மற்றும் 7.30 மணிகளுக்கு நடைபெறும். முதல்கட்ட ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அவுட் ஸ்டேஜ் போட்டிகளின்போது மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியை ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. லீக் போட்டிகள் முடிவடையும் கடைசி நாளான மே 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தாவில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸை எதிர்த்து விளையாட இருக்கிறது.
** – ராஜ்**
�,”