கொரோனா பரவல் காரணமாக 2021 ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ, “வீரர்கள் அனைவரும் பத்திரமாக, பாதுகாப்புடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனைத்துவகையான நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுக்கும்” என்று உறுதிபடுத்தியிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் எனப் பல அணிகளுக்குள்ளும் கொரோனா பரவியதால் ஐபிஎல் போட்டிகள் ஒட்டுமொத்தமாக தள்ளிவைக்கப்பட்டுவதாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ.
“வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் உடல்நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது. எல்லோரின் உடல்நலனிலும் அக்கறை கொண்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
நெருக்கடியான இக்காலகட்டத்தில் விளையாட்டின் மூலம் நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தலாம் என நினைத்து இந்தியாவில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், தற்போதைய சூழலில் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனில் அக்கறைகொள்ள வேண்டியது முக்கியம் என்பதால் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வீரர்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்புடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனைத்துவகையான நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுக்கும்” என பிசிசிஐ தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஐபிஎல் 2008 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தேர்தல் காரணமாக கடந்த ஆண்டுகளில் சிலமுறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. அதே போல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாகவும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் நடந்தது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இப்போதுதான் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன.
**-ராஜ்**
.�,