ஐபிஎல் 2022 – ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று (நேற்று 29) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை நேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார் . அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணிக்கு 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது.
அடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஹைதராபாத் அணி 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களமிறங்கிய மார்க்ரம் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிலைத்து நின்று விளையாடினர். குறிப்பாக அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதியில் ஹைதராபாத் அணியால் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இன்று (மார்ச் 30) இரவு நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
**ராஜ்**
.