15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (மே 7) இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், கேப்டன் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ராகுல் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
எனினும் டி காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 50 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடாவும் தன் பங்குக்கு 41 ரன்கள் எடுத்தார். க்ருனால் பாண்டியா 25, பதோனி 15, ஸ்டோய்னிஸ் 28, ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய பாபா இந்திரஜித் டக் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆண்ட்ரே ரசல் 45 (19), சுனில் நரைன் 22 (12) ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்று (மே 8) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.
**-ராஜ்-**
.