ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 17) மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய 28ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப்பை வீழ்த்தி நான்காவது வெற்றியை ருசித்தது ஹைதராபாத் அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 8 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில், ஜிதேஷ் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்களில் 62 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் அவரது அதிரடியால் விரைவாக ரன்கள் சேர்த்தார். அவருடன் ஷாருக்கான் நிதானமாக ஆடினார். அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய உம்ரான் மாலிக் நான்கு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர் .
தொடக்கத்தில் கேன் வில்லியம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார். அபிஷேக் ஷர்மா, திரிபாதி இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 62 ரன்களாக இருந்தபோது திரிபாதி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே அபிஷேக் ஷர்மாவும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்க்ரம், பூரன் நிலைத்து நின்று ஆடி விரைவாக ரன்களைச் சேர்த்து இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர் .
18.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது, மார்க்ரம் 41 ரன்களிலும் , நிக்கோலஸ் பூரன் 35 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி, நான்கு வெற்றி – இரண்டு தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
**-ராஜ்**
.