ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி!

entertainment

5ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 11) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தீவ் வேட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வேட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களான கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 32 பந்துகளை சந்தித்த அபிஷேக் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த திரிபாதி 17 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டெய்ட் முறையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்தார். இறுதியில் சன் ரைசர்ஸ் 19.1 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
நிகோலஸ் பூரன் 18 பந்துகளில் 34 ரன்களுடனும், மார்க்ரம் 8 பந்துகளில் 12 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்து ஹைதராபாத் வெற்றிக்கு வழிவகுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியுடன் ஹைதராபாத் அணி எட்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியுடன் குஜராத் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இன்று (ஏப்ரல் 12) இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

**ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.