15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
நேற்றைய 19ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .
ஒருபுறம் டேவிட் வார்னரும், மறுபுறம் பிரித்வி ஷாவும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது. .அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார் பின்னர் வந்த ரிஷாப் பண்ட் அதிரடியாக விளையாடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார் .
தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் ,ரோவ்மேன் பவெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அதிரடி காட்டினர்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து 216 ரன்கள் இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்கத்தில் வெங்கடேஷ் அய்யர் மற்றும் ரஹானே ஆட்டமிழந்தனர் .
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் நிதிஷ் ராணா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடிய 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாததால், கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
இதனால், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .டெல்லி அணியில் அதிகபட்சமாக குலதீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெல்லி அணி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. கொல்கத்தா ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
**ராஜ்**
.