மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 28) இரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பவலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் நரைன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ரசல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் குல்தீப் சுழலில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
15ஆவது ஓவருக்கு பிறகு அதிரடி காட்டிய நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 30 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளும் , ரகுமான் மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் பிரதீப் ராணா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் 24 எடுத்து ரன் அவுட்டாக கடைசி நான்கு ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் நம்பிக்கையாக இருந்த பவல் – தாக்கூர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் டெல்லி அணி 19ஆவது ஓவரில் 150 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலும், கொல்கத்தா அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.
இன்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும்.
**-ராஜ்-**
.