oஐபிஎல்: மீண்டும் வெற்றியை ருசித்த டெல்லி!

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லியை பழி தீர்க்கும் முனைப்பில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவ, 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீண்டும் வெற்றியை ருசித்துள்ளது.

13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு (அக்டோபர் 14) நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், உனத்கட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் ஜோஸ் பட்லர் 22 (9) ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் 1 (4) ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 41 (35) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 25 (18) ரன்களும், ரியான் பராக் 1 (2) ரன்னும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராபின் உத்தப்பா 32 (27) ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 (4) ரன்னும், கோபால் 6 (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ராகுல் தேவாட்டியா 14 (18) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நோர்ட்ஜே மற்றும் தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரபாடா, ஆர்.ஆஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

எட்டாவது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஆறாவது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. இது, ராஜஸ்தான் அணி சந்தித்த ஐந்தாவது தோல்வியாகும்.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share